காஷ்யப மகரிஷியின் மனைவி அதிதி கர்ப்பமாக இருந்த நேரத்தில் கணவருக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தார், அந்நேரத்தில் அந்தணர் ஒருவர் வந்து உணவு கேட்டார்.
கணவருக்கு பரிமாறிய பின் மெதுவாக நடந்து வந்து அந்தணருக்கு உணவு எடுத்து வந்தாள் அதிதி, அதனால் கோபம் அடைந்த அந்தணர், தர்மத்தை புறக்கணித்துவிட்டு கர்ப்பத்தை பாதுகாப்பதற்காக மெதுவாக நடந்து வந்த அந்த கர்ப்பம் கலைந்து போகட்டும் என்று சாபமிட்டார்.
அந்தணரிடம் பெற்ற சாபத்தின் செய்தியை அதிதி தன் கணவரிடம் விளக்கினாள். இதைக்கேட்ட காஷ்யப முனிவர், கவலைப்படாதே! அமிர்தம் நிறைந்த இந்த பூவுலகில், என்றைக்கும் அழிவில்லா மைந்தன் நமக்கு கிடைப்பான் என்று கூறினார்.
அவர் கூறியபடியே ஒளி பொருந்திய புத்திரனை பெற்றனர். அவரே உலகைக் காக்கும் சூரிய பகவான்.
சூரிய பகவானின் பிறந்த நாள், திதிகளில் வரும் ஏழாவது நாளான சப்தமி திதி ஆகும். இந்நாளே ரத சப்தமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த இனிய நாளில் வீட்டில் சூரிய ஒளிபடும் இடத்தில் நின்றபடி நீராட வேண்டும். ஏழு எருக்கம் இலைகளுடன், மஞ்சள் பொடி கலந்த அட்சதையை வைத்து வீட்டில் உள்ள அனைவரும் தங்கள் தலைக்கு மேலே வைத்துக்கொண்டு நீராடுவது நல்லது.
ரத சப்தமி ஸ்லோகம்: https://youtu.be/GL8TA_6yeT
எருக்க இலை கொண்டு ஏன் நீராடுகிறோம்?
நினைத்த நேரத்தில் உயிர்விடலாம் என்ற வரம் பெற்ற பீஷ்மர், மகாபாரதம் போரில் வீழ்ந்த பின், உத்தராயணத்தில் உயிர்விடவேண்டி அம்பு படுக்கையில் படுத்திருக்கிறார்.
காலம் சென்றுக்கொண்டே இருக்கிறது, எனினும் பீஷ்மரின் உயிர் பிரியவில்லை. அப்பொழுது அவரை சந்திக்க வந்த வியாசரிடம், ‘நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை?” என்று மனம் வருந்தினார் பீஷ்மர். அதற்கு வேத வியாசர், ‘பீஷ்மா, ஒருவர் தன் மனம், மொழி, மெய்யால் தீமை புரியாவிட்டாலும், பிறர் செய்யும் தீமைகளைத் தடுக்காமல் இருப்பதும் கூட பாவம் தான் என்றார்.
உடனே பீஷ்மருக்கு அஸ்தினாபுரத்தின் சபை நடுவே பாஞ்சாலியின் உடைகளை களைந்து துச்சாதனன் அவமானம் செய்தபோது, அதனை தடுக்காமல் இருந்து மிகப்பெரிய தவறு என்று பீஷ்மரின் நினைவிற்கு வந்தது.
இந்த பாவத்திற்கு விமோசனம் இல்லையா? என்று பிதாமகர் கேட்டதற்கு, எப்பொழுது உன் பாவத்தை உணர்ந்தாயோ, அப்போது அந்த பாவம் அகன்றுவிட்டாலும் அனைத்தையும் கண்டும் காணாமல் இருந்த கண்கள், செவி, வாய், தோள், கைகள், புத்தி உள்ள தலை ஆகியவை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றார் வியாசர்.
உடனே சூரிய பகவானின் நெருப்பைக் கொண்டு தன் உடலை சுட்டுப் பொசுக்குமாறு வேண்டுகிறார் பீஷ்மர். அதற்கு எருக்கம் இலையை காட்டிய வியாசர், அர்க்கம் என்றாலே சூரியன் என்று பொருள். எனவே இதனை தலையில் சூடியுள்ளார் சூரியன். பிரம்மச்சாரியான விநாயகருக்கு உகந்தது எருக்க இலை, அதேபோல் பிரம்மச்சாரியான உனக்கும் இந்த எருக்க இலையால் அலங்கரிக்கிறேன் என்று கூறினார்.
பிறகு மெதுவாக அமைதியடைந்த பீஷ்மர் ஏகாதசி அன்று உயிர்நீத்தார். பீஷ்மருக்கு வாரிசு என்று யாரும் இல்லாததால் நீத்தார் கடன் செய்வது குறித்து வியாசரிடம் தர்மர் வினவுகிறார். அதற்கு பதில் அளித்த வேத வியாசர், கவலைப்படாதே தர்மா! சூரியனுக்காக எருக்க இலை சூடி விரதம் இருக்கும் ரத சப்தமி நன்நாளில் பாரத தேசமே பீஷ்மருக்காக நீர்கடன் அளிக்கும் என்று கூறி ஆறுதல் அளித்தார்.
மேலும், ரத சப்தமி நன்நாளில் எருக்க இலைகளை தலையில் வைத்து கொண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களில் இருந்து விடுவித்துக்கொள்வதோடு, பீஷ்மருக்கு நீர்கடன் அளித்த புண்ணியம் கிடைக்கும் என்று அருளினார்.
Super awesome